விஷ்ணு புராணம்🌟 பிரகலாதனும் ஸ்ரீஹரியும்


விஷ்ணு புராணம்
🌟 பிரகலாதனும் ஸ்ரீஹரியின் திருவடிகளை எண்ணிய வண்ணமாக நரசிம்மரின் திருவடிகளை வணங்கி ஆனந்தத்தில் மூழ்கினான். அவனுடைய பக்தியின் பொருட்டு நரசிம்ம அவதாரத்தில் இருந்த ஸ்ரீஹரியின் கோபமானது தனிய துவங்கியது. பின்பு பிரகலாதனை அன்புடன் தன்னுடைய கரங்களினால் தடவிக் கொடுத்தார்.

🌟 பிரகலாதா உன்னுடைய அன்பினாலும், பக்தியினாலும் யான் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றேன் உனக்கு வேண்டும் வரத்தை எம்மிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக! என்று கூறினார்.

🌟 உடனே பிரகலாதன் நரசிம்ம பெருமாளை வணங்கி பெருமானே! நான் எத்தனை பிறவி எடுத்தாலும், எந்த உடலில் இருந்தாலும் அடியேன் உங்களை வழிபட வேண்டும் என்ற வரத்தினை எமக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினான்.

🌟 பிரகலாதன் கூறிய கூற்றுக்களை கேட்டதும் திருமால் மனம் மகிழ்ந்தார். நீ வேண்டிய வரத்தினை யாம் உமக்கு அளிக்கின்றோம்... உனக்கு விருப்பம் இல்லை என்றாலும் சில காலம் இம்மண்ணுலகில் ஆண்டு நல்ல அரசனாக ஆட்சி புரிந்து உலக இன்பங்கள் யாவற்றையும் அனுபவித்த பின்பு என்னிடத்தில் வந்து சேர்வாயாக! என்று வரத்தினை அளித்துவிட்டு அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றார் நரசிம்ம பெருமான்.

🌟 அவர் மறைந்த சென்ற பின்பு பிரகலாதன் தைத்ய ராஜ்ஜியத்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டு ராஜபோகத்தினால் பிராப்த கர்மாக்களை கழித்து, புத்திர, பௌத்திராதிகளை பெற்று, பிரார்த்த கர்மா அனுபவமாகிற அதிகாரங்கள் கழிந்தவுடன் இரண்டையும் விட்டு எம்பெருமான் அருளியபடி மோட்ச நிலையை அடைந்தான் பக்த பிரகலாதன்.

🌟 மைத்ரேயரே! எம்பெருமான் இடத்தில் எப்பொழுதும் பக்தி கொண்டு இருக்கக்கூடிய பரம பக்தனான பிரகலாதனின் சரித சரித்திரத்தை எவனொருவன் ஒருமித்த மனதுடன் கேட்கின்றானோ, அவனுக்கு அக்கணத்திலேயே சகல பாவங்களும் தீர்ந்து போகும்.

🌟 பிரகலாதனின் சரித்திரத்தை படிப்பவர்களும், கேட்பவர்களும் பல பிறவிகளில் செய்த பாவங்கள் யாவும் நீக்கப் பெறுவார்கள் என்பதில் சிறு ஐயமும் இல்லை. யார் இந்த சரித்திரத்தை படிக்கின்றார்களோ, அவன் பௌர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலேயே சூரிய கிரகண புண்ணிய காலத்தில் சொர்ணம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கன்றை ஈன்று கொண்டிருக்கக்கூடிய பசுவை பூரண மயமான தட்சணைகளோடு தானம் செய்த பயனை அடைவான்.

🌟 யார் ஒருவர் மிகுந்த பக்தியுடன் பிரகலாதனின் கதையை கேட்கிறார்களோ... அவர்களை ஸ்ரீமந் நாராயணன் பிரகலாதனை எவ்விதத்தில் பலவிதமான துன்பங்களில் இருந்து காப்பாற்றினாரோ அதைப்போலவே சகலவிதமான ஆபத்துக்களையும் விலக்கி சர்வகாலமும் பாதுகாப்பு ரட்சித்து அருள் புரிவார்.

விஷ்ணு புராணம் தொடரும்..!!

Comments