ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி
சோளிங்கர்
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி
அம்மன்/தாயார் : அமிர்தவள்ளி
தல விருட்சம் : -
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
விமானம் : சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர் : சோளிங்கர்
சோளிங்கரின் புராணப் பெயர் கடிகாசலம்.
இவ் விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என அழைத்தனர்.
ஆச்சாரியார்கள் சோளசிம்மபுரம் என்றும்,
சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்தனர்.
அவை மாறி, மாறி தற்போது சோளிங்கர்
ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிங்க அவதாரமாகும். அத்தகைய தெள்ளிய சிங்கமாகிய தேவனே யோக நரசிங்கனாய் இங்கு கோவில் கொண்டுள்ளான்.
108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.
நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந் நாத முனிகளும், மணவாள மாமுணியும், ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.
இங்கு தாயார், பெருமாள், பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். நம் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால், அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைக்க, நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவாராம். எனவே இந்த வரிசைப்படியே பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
அக்கார அடிசல் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு மிகவும் உகந்தது.
750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார்.
வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோயில்.
பொதுவாக பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் சேவை சாதிக்கிறார். மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார்.
விசுவாமித்திரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு பிரம்மரிஷி பட்டமும் பெற்றதாக வரலாறு உள்ளது.
பக்தன் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரர் இத்திருத்தலத்தில் தவமிருந்தார்.
கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளுக்கு காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.
அவர்களை வதம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றின் துணையோடு, அரக்கர்களை அழித்தார்.
மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சக்கரத்தோடு பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார்.
இம்மலையின் அருகே எதிர்திசையில் 350 அடி உயரத்தில், 406 படிக்கட்டுகள் கொண்ட, சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில் அமர்ந்தபடி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
ஆண்டு முழுவதும் கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் ஐதீகம்.
உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார்.
அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சன்னதி கொண்டுள்ளார்.
அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகியவை
பக்தோசித பெருமாள் கோயில் அருகில் உள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கும், தாயாருக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அதை பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனை வாங்கி உண்டால், மிகுந்த செல்வம் கிடைக்கும். நோய்கள் அகலும்.
பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.
தொட்டாச்சாரியார் ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்து வருவதை வழக்கமாகக் கொண்டவர். வயது மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியவில்லை.
ஒருநாள் இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப்பெருமாளையும், அவரது கருடசேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார்.
அப்போது கருடவாகனத்தில் வரதராஜப்பெருமாள் தக்கான் குளக்கரையில் தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார்.
இன்றும் காஞ்சிபுரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக்குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் மூன்று சன்னதிகளை கொண்டுள்ளது.
1. திருமலை (பெரியமலை) : அருள்மிகு அமிர்தபலவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு யோக நரசிம்மசுவாமி எழுந்தருளியுள்ள மலைக்கோயில்.
2. சிறிய மலை (கடிகாசலம்) : அருள்மிகு யோக ஆஞ்சநேயசுவாமி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய மூவரும் எழுந்தருளியுள்ள மலைக்கோயில். மேற்படி இரண்டு மலைக்கோயில்களும் நகரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூரில் அமையப் பெற்றுள்ளது.
3. ஊர் திருக்கோயில் : அருள்மிகு பக்தோசித பெருமாள், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆகிய எம்பெருமான்கள் ஊரிலேயே எழுந்தருளியுள்ளனர். இக்கோயில் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
தொண்டை நாட்டு வைணவ திருப்பதிகள் 22-ல் ஒன்றாக சோளிங்கர் திகழ்கிறது. ஸ்ரீ நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
ஏழு மாமுனிவர்களான வாமதேவர், வசிஷ்ட, கத்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்துவாஜர் ஆகியோர் சிங்கப் பெருமானை சாந்த வடிவில் தரிசிக்க விரும்பி இறைவனைத் தொழ எம்பெருமான், ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி, முனிவர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்திரை உற்சவத்தின் 9 நாட்களும் மலையில் இருந்து நரசிம்மர் சார்பாக சக்கரத்தாழ்வார் இறங்கி, ஊருக்குள் வலம் வந்து திரும்பவும் மலைக்குச் செல்வார். அவ்வேளையில் சக்கரத்தாழ்வாரே, தரிசிக்கும் பக்தர்களின் துயரங்களை போக்கிடுவார்.
முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக கூற்று நிலவுகிறது.
இந்த்ரத்யும்னன்
திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ‘ஹர’ என்று உச்சரித்தான். உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம். ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன், ‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.
ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்’’ என்று கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.
அட்ட நரசிம்ம தலங்களுள் ஒன்று சோளிங்கர்.
அட்ட நரசிம்ம தலங்கள்
அந்திலி
சிங்கரி கோவில்
சிங்கப்பெருமாள் கோவில்
சிந்தலவாடி
சோளிங்கர்
நாமக்கல்
பரிக்கல்
பூவரசன்குப்பம்
திருகோவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும்.
படி ஏறும் போது அங்குள்ள வாணரங்களுக்கு ஏதாவது வாங்கி சென்று கொடுங்க
கையில் குச்சியுடன் மலை ஏறுங்க
இல்லாவிட்டால் பூ முதல் அர்ச்சனை சாமான் வரை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும்.
குச்சியை தட்டிக்கொண்டே மலை ஏறினால் அருகேயே வராது
அற்புத தரிசனம்
கும்பகோணத்தில் இருந்து 261km.
கும்பகோணத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை விழுப்புரம்
செஞ்சி சேத்துப்பட்டு ஆரணி ராணிப்பேட்டை கடந்து சோளிங்கர் அடையலாம்.
இக்கோயில் சென்னையிலிருந்து 100கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும், திருத்தணியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சென்னையிலிருந்து ரயிலில் வருபவர்கள், அரக்கோணம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலை சென்றடையலாம்.

Comments
Post a Comment